(எசா 62:1-5, 1 கொரி 12:4-11, யோவா 2:1-12)
ஆண்டின் பொதுக்காலம் 2 ஆம் ஞாயிறு
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Tuesday, 11 Jan, 2022
திருப்பலி முன்னுரை:
வெறுமையிலிருந்து இறைவன் இவ்வுலகை உருவாக்கினார் (தொநூ 1:2). அப்படி வெறுமையிலிருந்து உலகை உண்டாக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இறைவனுக்கு, தாகத்தால் தவித்த இஸ்ரயேல் மக்களுக்கு தண்ணீர் வழங்க எதற்காக பாறையும், குச்சியும் தேவைப்பட்டன? கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது எதற்காக தண்ணீரும், ஆறு கற்சாடிகளும் தேவைப்பட்டன? பசியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க எதற்காக சிறுவன் வைத்திருந்த அப்பத் துண்டுகளும், மீன்களும் தேவைப்பட்டன? அற்புதங்கள் புரிவதற்கு மனிதனின் துணையை நாடும் இறைவன் கடவுளாக இருக்க முடியுமா? என்று பலர் விமர்சிப்பதும் உண்டு. இங்கு இறைவன் இயலாமையால் மனிதனின் உதவியை நாடவில்லை. மாறாக, தன்னுடைய மாபெரும் மீட்புத்திட்டத்தில் மனிதனுக்கும் பங்களிக்கின்றார். ‘அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்’ என்று அன்னை மரியா கூறுகிறார். இறைவனின் மீட்புத்திட்டத்தில் அவர் சொல்வதை எல்லாம் செய்வதுதான் மனிதர்களாகிய நமக்கு தரப்பட்டிருக்கின்ற பங்கு. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவர் சொன்னதை எல்லாம் செய்ததால் அப்பிரச்சனைக்கு தீர்வுக் கிடைத்தது. நாமும் இறைவன் சொல்வதை எல்லாம் செய்கின்றபோது நமது பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இறைவன் தரும் மீட்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம். மேலும், இன்று உழவர் திருநாளை கொண்டாடுகிறோம். உலகிற்கே உணவளிக்கும் உழவர்களுக்காகவும், உழவுத்தொழில் வளரவும் சிறப்பாக மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை:
உங்களை தெரிந்தெடுத்த இறைவன் பிற இனத்து மக்களின் முன் உங்களை தலைகுனிய விடமாட்டார். அவர் உங்களை இந்த உலகிற்கே ஒளி தரக்கூடியவர்களாக உயர்த்துவார். இந்த உலகமே உங்களது வெற்றியை காணும்படி செய்வார் என்று இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் உரைப்பதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
தூய ஆவியார் ஒவ்வொருவருக்கும் ஒரு கொடையை தந்திருக்கிறார். இவை அனைத்தும் அவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தந்து அதை செயல்படுத்துகிறார். இக்கொடைகள் அனைத்தும் தனி நபரின் நன்மைக்காகவோ புகழுக்காகவோ அல்ல; மாறாக, பொது நன்மைக்கே என்று கூறும் இந்த இரண்டாம் வாசகத்தை கேட்போம்
மன்றாட்டுக்கள்:
1. அன்புத் தந்தையே இறைவா! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் உலகிலுள்ள பிறசபைகள், சமயங்களோடு ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தி, அவர்களையும் உம் மந்தைகளோடு இணைத்து உம் இறையரசை நோக்கி அழைத்துவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எங்கள் வானகத் தந்தையே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் உணவை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கவும், விவசாய தொழிலுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து அதை வளர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கமுள்ள தந்தையே! உழவர் திருநாளை சிறப்பிக்கும் இன்று எம் பங்கிலும், ஊரிலும் உள்ள எல்லா உழவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். இவர்களின் கடின உழைப்பால் தான் இவ்வுலகம் உண்டு வாழ்கிறது என்பதை புரிந்துகொண்டு, அவர்களை மதித்து நடக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் பரம தந்தையே! நாட்டின் பல்வேறு இடங்களில் மதத்தின் பெயரால் தாக்கப்படும் மக்களை நீர் அரணும், கோட்டையுமாய் இருந்து காக்கவும், அவர்களின் நம்பிக்கை குறைந்து போகாதவாறு அவர்களை திடப்படுத்தி, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் விண்ணகத் தந்தையே! மழை இல்லாத காரணத்தினாலும், அதிகமான மழையாலும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளையும், ஏழை-எளிய மக்களையும் நீர் ஆசீர்வதித்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Comment